கமல முனிவர் தலையால் நடந்து வந்து வழிபட்டதால் 'தலையாலங்காடு' என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர். தாருக வனத்து முனிவர்கள் அனுப்பிய முயலகன் மீது சிவபெருமான் நடனம் புரிந்ததால் மூலவருக்கு 'ஆடல்வல்ல ஈசுவரர்' என்ற பெயர் உண்டு.
மூலவர் 'நர்த்தனபுரீஸ்வரர்' சதுர வடிவ ஆவுடையுடன் சற்று உயர்ந்த பாணத்துடன் பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பாலாம்பிகை' என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றாள்.
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வநாதர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நவக்கிரகங்கள், பைரவர், சமயக் குரவர்கள் நால்வர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.
இக்கோயிலில் பாண்டிய மன்னன் பிரதிஷ்டை செய்த காளி சன்னதி உள்ளது. இவரை வழிபட்டுச் சென்று போரில் வெற்றி பெற்று 'தலையானங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுங்செழியன்' என்னும் பெயர் பெற்றான்.
தை அமாவாசையன்று சங்கு தீர்த்தத்தில் மதியம் 'தீர்த்தம் கொடுக்கும் பெருவிழா' சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கபில முனிவர் வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|